கம்பன் விழா 2017

நாள்: 16.07.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணி

Kamban Vizha Inv2017-1

சிறப்பு விருந்தினர்: திரு கா. சண்முகம், சட்ட உள்துறை அமைச்சர்

சிறப்புரை: ”கம்பன் சொன்னான்…” திரு த. இராமலிங்கம்

உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம்

அனைவரும் வருக!

களை கட்டிய கம்பன் விழா 2015

Kamban Vizha 2015 GOH

 

சிறப்பு விருந்தினர் நாடாளுமன்ற நியமன உறுப்பினர் திரு. கி.கார்த்திகேயனுடன் எழுத்தாளர் கழகத் தலைவரும் செயலாளரும்

Kamban Vizha Speaker

சிறப்புரை ஆற்றும் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

அரங்கு நிறைந்த கூட்டத்துடன் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழத்தின் ‘கம்பன் விழா’ நேற்று (19.7.2015, ஞாயிற்றுக்கிழமை) மிகச் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிகள் சுருக்கமாகவும், கச்சிதமாகவும் அமைந்திருந்தன. செல்வி தேஜஶ்ரீயின் தமிழ் வாழ்த்துக்குப் பின், ஆலாபனா கலைப் பள்ளியின் மூவர் நடனம், (யாமறிந்த மொழிகளில்) நல்ல கலைத் தயாரிப்பு. நவரச நாயகர் சோமசுந்தரம் பொறுப்பில் மேடை ஏறிய ‘பாதுகை’ நாடகத்தில், உச்சரிப்பு சுத்தமாக வசனம் பேசிய இளம் நடிகர்கள், நடிப்பு எல்லாமே எதிர்பாராத விருந்து. ராமன், இலக்குவன், பரதன், சீதை பாத்திரங்களை ஏற்ற அனைவருமே சிறப்பாக நடித்தனர்.

செயலாளர் சுப.அருணாசலம் நெறிப்படுத்திய நிகழ்ச்சியில், தலைமையுரை நிகழ்த்திய எழுத்தாளர் கழகத்தின் தலைவர் நா.ஆண்டியப்பன், சமூக ஊடகங்களில் எழுதுவோர் பொறுப்பற்ற முறையில் எழுதக்கூடாது என்று குறிப்பட்டார். சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நாடாளுமன்ற நியமன உறுப்பினர் திரு. கார்த்திகேயனின் சிற்றுரையை விட, அவர் பாடிய ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ பாடல் நல்ல ரசனையாக அமைந்தது.

கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் கிட்டத்தட்ட எண்பது நிமிடங்கள் பேசினார். கடல் மடை திறந்த சொற்பொழிவு! அவரது இலக்கிய உரையில், கம்பன் மட்டுமின்றி, திருவள்ளுவர், மாணிக்கவாசகர் ஆகியோரும் உலா வந்தனர். வைணவப் புராணங்களும் சைவக் கதைகளும் வந்தன. இத்தனைக்கும் அச்சாணியாக பரதன் வந்து கொண்டே இருந்தான். ‘நின்னிலும் நல்லவன்’ எனக் கோசலையால் புகழப்பட்ட பரதனை, ‘நாய்க் குகன் என்றெனை ஏசாரோ’ என்று வீரிட்டு எழும் ‘கங்கையிரு கரை யுடையான்-கணக்கிறந்த நாவாயான் குகனால்’, ‘ஆயிரம் ராமர் நின் கேழ் ஆவரோ’ எனப் பாராட்டப்படும் பரதனை, கம்பவாரிதி கவிதை மழையால் நனைத்து எடுத்தார். ‘நானோ அரசாள்வேன்’ என்ற பேசாப் பாத்திரம் சத்ருக்கணனின் உயர் பண்பையும் வெளிக்காட்டினார். “உள்ளத்தனையதுதான் உயர்வு” என்பதை இப் பாத்திரங்களைக் கொண்டு அவர் விளக்கிய விதம் அருமை!

நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றிய சுப.அருணாசலம் தந்த செய்தி: தமிழகத்தின் தலை சிறந்த குடும்ப, இலக்கிய இதழான கலைமகள், தனது கி.வ.ஜ அறக்கட்டளை சார்பில், இந்த ஆண்டுக்கான இலக்கிய விருதை இலக்கிய வேந்தன் நா.ஆண்டியப்பனுக்கும், மூத்த எழுத்தாளர் ஏ.பி.ராமனுக்கும் வழங்கவிருக்கிறது என்று அறிவித்தார். இந்த நிகழ்ச்சி, வருகிற செப்டெம்பர் 27 அன்று உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நேற்றைய நிகழ்வில் வெளியிடப்பட்ட மற்றொரு தகவல்: வரும் ஆகஸ்ட் 3 முதல் 7ஆம் தேதி வரை தாய்லந்து அரசாங்கம் ஆசியான் நாடுகளின் பேராளர்கள் பங்கேற்கும் இராமாயண மாநாட்டை நடத்தவிருக்கிறது. பேங்காக்கில் நடைபெறும் அந்த மாநாட்டில் இலக்கியத் துறை, காட்சி ஊடகத் துறை, மேடைக் கலைத் துறை ஆகிய மூன்று பிரிவுகளில் ஆசியான் நாடுகளில் இராமாயணம் குறித்து மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும்.

கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் “உள்ளத்தனைய உயர்வு எனும் தலைப்பில் ஆற்றிய சிறப்புரையின் காணொளி:

பகுதி 1

பகுதி 2

பகுதி 3