கவியரசு கண்ணதாசன் விருது 2022
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டு தோறும் வழங்கிவரும் கவியரசு கண்ணதாசன் விருது இவ்வாண்டு எழுத்தாளர், கவிஞர், பாடலாசிரியர் சுபாசினி கலைக்கண்ணனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த 19.11.2022ஆம் தேதி தேசிய நூலகக் கட்டடத்திலுள்ள டிராமா சென்டரில் நடைபெற்ற கவியரசு கண்ணதாசன் விழாவில் அவ்விருது அவருக்கு வழங்கப்பட்டது. நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கலாசார, சமூக, இளையர் அமைச்சு, சமுதாய மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சு ஆகியவற்றுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் திரு. எரிக் சுவா அவ்விருதினை திருவாட்டி சுபாசினிக்கு வழங்கினார்.
சிறப்பு விருந்தினர் திரு. எரிக் சுவா தமது உரையில் சிங்கப்பூரில் நமது கலையும் மரபும் பல்வேறு வகையாகவும் துடிப்புடனும் இருப்பதாகக் கூறினார். இதற்குக் காரணம் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் போன்ற அமைப்புகளும் சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவின் வளமான நிகழ்ச்சிகளும்தான் என்று அவர் குறிப்பிட்டார். அந்த வகையில் உலகின் வெகு சில பலமொழி இலக்கிய விழாக்களில் ஒன்றான சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவுடன் இவ்வாண்டு கவியரசு கண்ணதாசன் விழா படைக்கப்படுவது சிறப்புக்குரியது என்றார் திரு. எரிக் சுவா.
தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த இசைக்கவி இரமணன், கவியரசரின் திரைப் பாடல்களில் இலக்கிய நயம் எனும் தலைப்பில் அருமையாக உரையாற்றினார்.
எழுத்தாளர் கழகத்தின் மறைந்த மேனாள் தலைவர் அமரர் சுப. அருணாசலம் நினைவாக நடத்தப்பட்ட சூழலுக்குப் பாடல் எழுதும் போட்டியில் சீர்காழி திரு. செல்வராஜ் முதல் பரிசு பெற்றார்.
பாடல் எழுதுவதற்கான சூழல் இதுதான்: நமது சுற்றுச் சூலுக்குத் தற்போது பல்வேறு வகைகளில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அதனால் சுற்றுச் சூழல் பாதுகாப்பையும் அதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்திப் பாடல் வரிகளை வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
முதல் பரிசு பெற்ற பாடல் இசையமைக்கப்பட்டு விழாவில் ஒலியேற்றப்பட்டது.
கவியரசு கண்ணதாசன் பாட்டுத் திறன் போட்டியில் 14 வயதிற்குக் கீழான பிரிவில் அகர முதல எழுத்தெல்லாம் என்ற பாடலைப் பாடி ஆதார்ஷ் அக்னி முதல் பரிசை வென்றார்.
14 வயதிற்கு மேலான பிரிவில் கிருஷ்ணமூர்த்தி ஸ்ரீநிவாசன் இளமை எனும் பூங்காற்று பாடலைப் பாடி முதல் பரிசைத் தட்டிச் சென்றார்.
முனைவர் மன்னை க. இராஜகோபாலன், திருவாட்டிகள் சுவப்னாஸ்ரீ ஆனந்த், பாரதி முரளி, கோதா, தேனம்மை ஆகியோர் நடுவர்களாக இருந்து பரிசுக்குரியவர்களைத் தேர்வு செய்தனர்.
முன்னதாக நடுவர்களில் ஒருவரான திருவாட்டி பாரதி முரளி, கவியரசர் எழுதிய தமிழ் வாழ்த்துப் பாடலைப் பாடி விழாவைத் தொடங்கி வைத்தார். அடுத்து திருவாட்டி தேவி நடத்தும் சக்தி நுண்கலைக்கழக மாணவிகள் திருவருட்செல்வர் படத்தில் கவியரசர் எழுதிய மன்னவன் வந்தானடி பாடலுக்கு அற்புதமான நடனத்தைப் படைத்தனர்.
கழுத்தாளர் கழகச் செயலாளர் திருவாட்டி கிருத்திகா வரவேற்புரை ஆற்ற, தலைவர் திரு. நா. ஆண்டியப்பன் தலைமையுரை ஆற்றினார். துணைச் செயலாளர் திரு. கோ. இளங்கோவன் நன்றி தெரிவித்தார்.
கவியரசு கண்ணதாசன் விருது 2021
படவிளக்கம்: சிறப்பு விருந்தினர் திரு.கி. கார்த்திகேயன் திரு, அஷரத்துல்லாவிற்குக் கவியரசு கண்ணதாசன் விருதினை வழங்குகிறார். அருகில் எழுத்தாளர் கழகத் தலைவர் திரு. நா. ஆண்டியப்பன், செயலாளர் திருவாட்டி கிருத்திகா.
கவியரசு கண்ணதாசன் விருது 2020
விருதை பெறுபவர் : செல்வி கலைவாணி இளங்கோ
கவியரசு கண்ணதாசன் விருது 2019
திரு. முகம்மது யாசிர்
கவியரசு கண்ணதாசன் விருது 2018
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் வழங்கிவரும் கவியரசு கண்ணதாசன் விருது இவ்வாண்டு தொலைக்காட்சி கதை, திரைக்கதை, வசனம் எனப் பல துறைகளில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வரும் திரு. S.S. விக்னேஸ்வரன் சுப்பிரமணியத்துக்கு 17.11.2018 சனிக்கிழமை அன்று நடைபெற்ற கண்ணதாசன் விழாவில் வழங்கப்பட்டது.
வசந்தம் தொலைக்காட்சியின் பல தொடர் `நாடகங்களுக்கு கதை,திரைக்கதை ,வசனம் எழுதிய இவர் தொடர்களின் தலைப்பு பாடல்களை எழுதி உள்ளார் .இவர் சமீபத்தில் வெற்றி நடை போடும் ’அடுக்கு வீட்டு அண்ணாசாமி’ என்ற நாடகத்துக்கு தொலைக்காட்சிக்கு ஏற்ற வகையில் திரைக்கதை வசனம் எழுதி உள்ளார்.
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் நான்கு முக்கிய விழாக்களில் ஒன்றான கவியரசு கண்ணதாசன் விழா அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் மண்டபத்தில் நிறைந்த சபையுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அதில் சிங்கப்பூர் இந்திய வர்த்தக சபையின் தலைவரும் மாடர்ன் மாண்டிசோரி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான டாக்டர் த. சந்துரு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
கவியரசரின் மகனும் சிறந்த பேச்சாளரும், நடிகரும், ஒளிப்பதிவாளருமான திரு. கோபி கண்ணதாசன் ”கவிஞர் வாழ்வும் அவர்தம் பாடல்களும்” எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். கவியரசரைப் பற்றி அரிய புதிய தகவல்களை அவர் பார்வையாளர்களிடம் பகிர்ந்துகொண்டார்.
கவியரசு கண்ணதாசன் பாட்டுத் திறன் போட்டியில் 14 வயதிற்குக் கீழுள்ளவர்களுக்கான பிரிவில் “கண்ணே கலைமானே” எனும் மூன்றாம் பிறை திரைப்படப் பாடலைப் பாடி முதல் பரிசைத் தட்டிச்சென்றார் செல்வன் ரகு ஶ்ரீராம். 14 வயதிற்கு மேலுள்ளவர்களுக்கான பிரிவில் ”செந்தமிழ்த் தேன்மொழியாள்” எனும் மாலையிட்ட மங்கை திரைப்படப் பாடலைப் பாடி அனைவரையும் தன் பாட்டுடன் தாளம் போட வைத்து திரு. மிர்னால் நாராயணன் முதல் பரிசை வென்றார். முனைவர் க. இராஜகோபாலன், திருமதி நளினி கணேசன், திரு. என். எஸ். சேதுராமன் ஆகியோர் நடுவர்களாகப் பணியாற்றினர்.
எழுத்தாளர் கழகத் தலைவர் திரு. நா. ஆண்டியப்பன் தன் தலைமை உரையில் அரசாங்கம் தமிழ் மொழிக்கு கொடுக்கின்ற ஆதரவைத் தமிழ் ஆர்வலர்கள் , எழுத்தாளர்கள் நன்கு பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்றும் அரசாங்கம் ஏற்பாடு செய்யும் தமிழ் நிகழ்வுகளில் அதிக எண்ணிக்கையில் கலந்து கொள்ளவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
திரு. என். எஸ். சேதுராமனின் தமிழ் வாழ்த்தைத் தொடர்ந்து கவியரசு கண்ணதாசனின் “கொஞ்சும் சலங்கை” பாடலுக்குச் செல்வி கவிதா நடனமாடினார். கவியரசின் பாடல் குறித்த புதிர்ப்போட்டியின் வெற்றியாளர்கள் மூவருக்கு கவியரசரின் படைப்புகள் கொண்ட தொகுப்பு நூல்கள் பரிசாக வழங்கப்பட்டன. வரவேற்புரை ஆற்றிய செயலாளர் திரு. சுப. அருணாசலம் நிகழ்ச்சி நெறியாளராகவும் பணியாற்றினார். பொருளாளர் திரு. முத்து மாணிக்கம் நன்றியுரை ஆற்றினார்.
நிகழ்ச்சியின் இறுதியில் இந்தியாவைச் சேர்ந்த நடனக் குழுவின் எதிர்பாராத நடனம் பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சி விருந்தாக அமைந்தது. ”மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன?” என்ற தில்லானா மோகனாம்பாள் பாடலுக்கு ஒரு நடனமணி தனியாக நடனமாட கவியரசின் பாடலுடனேயே நிகழ்ச்சி நிறைவை நாடியது.
கவியரசு கண்ணதாசன் விருது 2017
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் நடத்தும் கவியரசு கண்ணதாசன் விழாவில் நவம்பர் 18ஆம் தேதி அன்று கவிஞர் கண்ணதாசன் விருது 2017 எழுத்தாளர் பொறியாளர் எம்.கே.குமார் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
கவியரசு கண்ணதாசன் விருது 2016
திரு சலீம் ஹாடிக்கு கவியரசு கண்ணதாசன் விருது 2016
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் நடத்தும் கவியரசு கண்ணதாசன் விழாவில் நவம்பர் 26ஆம் தேதி அன்று கவிஞர் கண்ணதாசன் விருது 2016 குறும்பட, மேடை நாடகக் கதை, வசனகர்த்தா திரு சலீம் ஹாடி அவர்களுக்கு வழங்கப்பட்டது.
திருமதி ஜெயா இராதாகிருஷ்ணனுக்கு கவியரசு கண்ணதாசன் விருது 2015
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் அபிராமி நகைக் கடையின் ஆதரவுடன் வழங்கிவரும் கவியரசு கண்ணதாசன் விருது 2015ஆம் தொலைக்காட்சி கதை, திரைக் கதை, வசனம், பாடல்கள் எனப் பல துறைகளில் திறமைபெற்ற 34 வயது திருமதி ஜெயா இராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.
எழுத்தாளர் கழகத்தின் நான்கு முக்கிய விழாக்களில் ஒன்றான கவியரசு கண்ணதாசன் விழா டிசம்பர் 5ஆம் தேதி சனிக்கிழமை மாலையில் அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினர் திரு. கி. கார்த்திகேயன் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிற்றுரை ஆற்றியதுடன் கண்ணதாசனின் இரண்டு பாடல்களையும் அருமையாகப் பாடினார்.
வெள்ளத்தால் சென்னை விமான நிலையம் மூடப்பட்டிருந்ததால் கவிஞர் முத்துலிங்கம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலவில்லை. அவருக்குப் பதில் மலேசிய வழக்குரைஞர் திரு- பாண்டித்துரை பங்கேற்று கவியரசு கண்ணதாசனைப் பற்றி அற்புதமாகச் சிறப்புரை ஆற்றி அனைவரையும் கவர்ந்தார்.
கவியரசு கண்ணதாசன் பாட்டுத்திறன் போட்டியில் 14 வயதிற்குக் குறைவானவர்களுக்கான பிரிவில் “மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?” எனும் தில்லானா மோகனாம்பாள் படப் பாலைப் பாடி முதல் பரிசைத் தட்டிச்சென்றார் செல்வி பாலச்சந்தர் ஶ்ரீவித்யா. 14 வயதிற்கு மேலுள்ளவர்களுக்கான பிரிவில் திருமதி ஶ்ரீநிவாசன் செளந்தர்யலக்ஷ்மி “பளிங்குனால் ஒரு மாளிகை” பாடலைப் பாடி முதல் பரசை வென்றார். திரு.ஜெயராஜதாஸ், திரு. சி. குணசேகரன், திருமதி வசந்தி ராமச்சந்திரன் ஆகியோர் நடுவர்களாகப் பணியாற்றினர்.
தொடக்கத்தில் கவியரசு கண்ணதாசனின் “ஆடி வா அழகு ராணி” பாடலுக்குச் செல்விகள் அஷ்மிதா ஜெயபிரகாஷ், க்ஷிரிஜா கோவிந்த் ஆகியோர் அருமையாக நடனமாடினர்.