கேள்வி-பதில்
சிறுகதை எழுதுவது எப்படி? – இராம. வயிரவன்
10 படிகள் (ஆரம்ப நிலை)
-
திருப்பத்தைக் கண்டுபிடி
-
கதைச்சுருக்கம் எழுது
-
சரியான இடத்தில் விறுவிறுப்போடு கதையை ஆரம்பி
-
காட்சியை விவரித்துக் கதையை நடத்து
-
சரியான இடத்தில் நிறுத்தி முன்கதை சொல்லு
-
முன்கதை முடித்து நிகழ்வுக்கு வா
-
கதையை அழகாய் முடி
-
இரண்டாவது திருப்பம் இருக்கிறதா பார்
-
சரியான தலைப்பு வை
-
மீண்டும் படித்து பிழை திருத்தி நேர்த்தி செய்
1.எழுதும் திறனை வளர்த்துக் கொள்ள என்ன செய்யலாம்?
-
நிறையவாசியுங்கள்.
எழுத்தாளர்களின் சிறந்தகதைகளின் பட்டியல் தயாரித்துக் கொள்ள வேண்டும். அவற்றை நூலகங்களில் எடுத்துப் படித்து குறிப்புக்களையும், ஏற்படும் அனுபவங்களையும் சேகரியுங்கள்.மொழிபெயர்ப்புக் கதைகள், பலஇன, மொழி, மற்றும் பலநாட்டுக் கதைகளையெல்லாம் வாசியுங்கள்
-
போலஎழுதிப்பழகுங்கள்.
ஒரு எழுத்தாளரின் ஒரு குறிப்பிட்ட கதை மிகவும் உங்களைக் கவர்ந்துவிட்டது என்று வைத்துக் கொள்வோம். அதேபோல நீங்களும் ஒருகதையை உங்கள் மொழியில் எழுதிப் பயிற்சி எடுக்கலாம்.
-
சலிப்புத் தட்டாமல் எழுதுங்கள்.
பலராலும் அடிக்கடி பயன்படுத்தப்படும் பழமொழிகள், நகைச்சுவைகள், மொழி இவற்றைப் பயன்படுத்தாதீர்கள். உதாரனம்: ‘நகமும்சதையும்போல’ என்று எழுதாதீர்கள். அதற்குப்பதிலாக “கைத்தொலைபேசியும், கையும்போல” என்று எழுதினால் படிப்பவர்களுக்கு ‘அடஇதுபுதுசாஇருக்கே’ என்று தோன்றும்.
-
பிழையில்லாமல் எழுதுங்கள்.
ஒற்றுப்பிழை, இலக்கணப்பிழை இல்லாமல் எழுதுவது எப்படி என்று கற்றுக் கொள்ளுங்கள். பல இலக்கணநூல்கள் இருக்கின்றன. அவற்றைஎடுத்துப் படித்து பிழை இல்லாமல் எழுதக்கற்றுக் கொள்ளுங்கள். சின்ன சின்ன வாக்கியங்களாக எழுதுங்கள்.
-
வித்தியாசமாக எழுதுங்கள்.
கதைக்களம் வித்தியாசமானதாக இருக்கட்டும். மொழிவித்தியாசமாக இருக்கட்டும். கதைசொல்லும் உத்தி, கதையின் முடிப்பு ஆகிய எல்லாவற்றிலும் வித்தியாசமாய் யோசியுங்கள். முற்றிலும் உரையாடலாகவே ஒரு கதை எழுதிப்பாருங்கள்.
-
திருப்பம் வேண்டும் என்பதற்காகப் பாத்திரங்களைச் சாகடிக்காதீர்கள்.
ஒரு சிறு திருப்பம் அல்லது அப்படி ஒன்றும் இல்லாத ஒர் அனுபவம் கூட அழகான கதையாகிவிடும்.
-
கதைகளில் அறிவுரை சொல்லாதீர்கள்.
கருத்துச் சொல்வதற்காகக் கதை எழுதாதீர்கள்.
-
கதைகளில் செய்திகள் சொல்லாதீர்கள்.
கதைகளில் உங்களுக்குத் தெரியும் என்பதற்காக நிறையச் செய்திகளைச் சொல்லாதீர்கள். பின் அவை கட்டுரைகளாகிவிடும்.
-
நல்ல தலைப்பு வையுங்கள்.
நல்ல தலைப்புக் கிடைக்கும் வரை பொருத்திருங்கள். கதையை தலைப்பில் சொல்லாதீர்கள்.
-
எழுதிவிட்டுப் பலமுறை படித்து கூறியது கூறல் இருக்கிறதா என்று பாருங்கள்.
சில நாள் விட்டு மீண்டும் படித்துப் பாருங்கள். எந்த மாதிரியான வடிவம் கதைக்குச் சரியாக வரும் என்று பாருங்கள். பிழைதிருத்துங்கள். நண்பர்களிடம் படித்துக்காட்டிக் கருத்தை கேட்டுக் கொள்ளுங்கள்.
-
நிறையவாசியுங்கள்!
2. சிறுகதை விமர்சனம் செய்வது எப்படி?
3. சிறுகதையும் குறுநாவலும் -ஒரு ஒப்பீடு
சிறுகதைக்கும் குறுநாவலுக்கும் இடையே சில வித்தியாசங்கள் இருக்கின்றன.
-
ஒன்று:
சிறுகதையை எழுத ஒரு சம்பவம் போதும் அதை ஒரு பக்கத்தில் இருந்து சுமார் பத்து பக்கங்கள் வரை எழுதலாம்.
குறுநாவலை எழுத ஒற்றை சம்பவம் போதாது. ஒன்றுக்கு மேற்பட்ட சம்பவங்கள் தேவை.குறைந்தது பதினைந்து பக்கங்கள் முதல் முப்பது பக்கங்கள் வரை எழுதலாம். கதையின் தன்மையைப் பொறுத்து இந்த பக்க அளவு மாறும். -
இரண்டு:
சிறுகதை ஒரு கதாபாத்திரத்தின் பிரச்சனை பற்றிப் பேசும்.குறுநாவல் ஒரே கதாபாத்திரத்தின் பிரச்சனை பற்றியும் பேசும்,ஒன்றுக்கு மேற்பட்ட கதாபாத்திரங்களின் பிரச்சனை பற்றியும் பேசும்.
-
மூன்று:
சிறுகதை ஒரு நாள் அல்லது ஒருமணி நேரத்துக்குள் நிகழும் நிகழ்ச்சி பற்றிப் பேசும்.குறுநாவல் பலநாட்கள் நடக்கும் தொடர்சம்பவங்கள் பற்றி விவரிக்கும்.
-
நான்கு:
சிறுகதைக்கு ஆரம்பம், நடு, முடிவு ஆகிய பாகங்கள் உண்டு. ஆனால், இவற்றை மாற்றிப் போடலாம். எடுத்துக்காட்டாக, சுஜாதாவின் ‘ஒரே ஒரு மாலை’ என்ற சிறுகதையில் ஆரம்பம் தொடங்கியதும் நடுப்பகுதிவராது முடிவு வந்துவிடும். அதன் பின்னரே நடுப்பகுதி வரும். இந்த வரிசைக் கலைப்பால் அந்தச் சிறுகதையின் அழுத்தம் அதிகமானது.குறுநாவலுக்கு ஆரம்பம், நடு, முடிவு என்ற பகுதிகள் அவசியம். அவற்றை மாற்றிப் போடுவது சிக்கலை ஏற்படுத்தும். கதையின் உருவ அமைதியைக் கெடுக்கும். இரா. நடராஜனின் ‘ஆயிஷா’, ஜெயகாந்தனின், ‘உன்னைப்போல்ஒருவன்’போன்ற கதைகளின் மகத்தான வெற்றி அவற்றின் ஆரம்பம், நடு, முடிவு என்ற நேர்க்கோட்டு வரிசைகதை சொல்லல் மூலம் சாத்தியமானது
-
ஐந்து:
சிறுகதையோ, குறுநாவலோ எதுவாக இருந்தாலும், சொற்சிக்கனம் முக்கியம். சுருங்கக் கூறி விவரிப்பது கதையின் வேகத்தை அதிகரிக்கும்.‘அவன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது’ ‘பத்மா ஒரு நல்ல பெண்’ என்பது போன்று சுவாரஸ்யம் இல்லாமல் எழுதுவதைத் தவிர்க்க வேண்டும்.‘சற்றும் எதிர்பாராமல் அதுநடந்தது.அப்போது ராம் தரையில் மல்லாக்கக் கிடந்தான்’ என்ற ரீதியில் வாசகனின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் கதையில் ஏதாவது செய்தி இருக்க வேண்டும்.முதல் வரியிலேயே வாசகனை ஈர்த்து விடவேண்டும். அதன் பிறகு அவனை எக்காரணம் கொண்டும் கைவிட்டுவிடக்கூடாது. ஆரம்பகால எழுத்தாளர்களுக்கு சுஜாதா, பாலகுமாரன் போன்றோரின் குறுநாவல்கள் முன்மாதிரியாக இருக்கும். அவற்றைப் படித்துப் பார்க்கலாம்.காலப்போக்கில் அதிலிருந்து விலகி,தங்கள் தனித்த நடையை உருவாக்கிக் கொள்ளலாம். எழுத எழுத நமக்கென்று ஒரு தனித்தநடை உருவாவதை நாமே உணரலாம்.