முத்தமிழ் விழா 2022

ராம். நாராயணசாமிக்கு தமிழவேள் விருது

மூத்த எழுத்தாளரும் நாடக ஆசிரியருமான திரு. ராம். நாராயணசாமிக்கு இவ்வாண்டுத் தமிழவேள் விருது வழங்கிச் சிறப்பித்திருக்கிறது சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம். கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி இணையத்தில் சூம் வழி நடைபெற்ற முத்தமிழ் விழாவிற்கு முன்னதாக 17ஆம் தேதி விருது வழங்கும் நிகழ்வு நேரடியாக நடைபெற்றது. எழுத்தாளர் கழகத் தலைவர் திரு. நா. ஆண்டியப்பனும் செயலாளர் திருவாட்டி கிருத்திகாவும் உடனிருக்க சிறப்பு விருந்தினர், புக்கிட் தீமா தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. முரளி பிள்ளை விருதினை வழங்கிச் சிறப்பித்தார்.

அத்துடன் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் 17ஆம் தேதி பரிசளிப்பு நடைபெற்றது. பாலர் பள்ளி, தொடக்கப் பள்ளி மாணவர்களுக்குத் திரு. முரளி பிள்ளை பரிசுகள எடுத்து வழங்கினார்.

வளர் தமிழ் இயக்கத்தின் தற்போதைய மதியுரைஞரும் மேனாள் தலைவருமான திரு. ஆர். ராஜாராம், உயர்நிலை, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் பரிசுகளை வழங்கினார்.

இந்தப் பரிசளிப்பு நிகழ்வுகள் அனைத்தும் காணொளிகளாகப் பதிவு செய்யப்பட்டு 23ஆம் தேதி இணையத்தில் விழா இடம்பெற்றபோது ஒளிபரப்பப்பட்டன.

அத்துடன் கண்கவர் நடனத்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில், மாறுவேடப் போட்டிகளில் முதல் மூன்று நிலைகளில் வெற்றிபெற்றவர்களின் நடிப்புத் திறன், தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான கதை சொல்லும் போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவியின் கதை சொல்லும் திறன், பேச்சுப் போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவியின் பேச்சுத் திறன் ஆகியவை நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்புச் சேர்த்தன.

கல்வி அமைச்சின் தமிழ் மொழி கற்றல், வளர்ச்சிக் குழுவின் ஏற்பாட்டில் வளர் தமிழ் இயக்கத்தின் ஒருங்கிணைப்புடன் நடைபெறும் தமிழ் மொழி விழாவின் ஒரு பகுதியாக முத்தமிழ் விழா நடைபெறும்.

சிறப்புப் பேச்சாளர்கள்

சிங்கப்பூரின் இளம் பேச்சாளர்கள் இருவர் சிறப்புரை ஆற்றினர். இணையப் பாதுகாப்புப் பொறியாளரும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் மேனாள் தலைவருமான திரு. அருள் ஓஸ்வின் “தமிழும் இளையரும்” எனும் தலைப்பில் உரையாற்றினார். நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கிய மன்றத் தலைவி செல்வி மிருதுளா குமார் “தமிழும் தொழில்நுட்பமும்” எனும் தலைப்பில் உரையாற்றினார். இருவரும் உரையும் அனைவராலும் வரவேற்கப்பட்டது.

முத்தமிழ் விழா 2021

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் தமிழ் மொழி விழாவின் ஓர் அங்கமாக நடத்தும் முத்தமிழ் விழா இவ்வாண்டு 17 ஏப்ரல் 2021 அன்று இணையம்வழி மாலை 6 – 8 மணி வரை நடத்தப்படும்.

சூம் இணைப்பு : http://singaporetamilwriters.com/muthamiz

முத்தமிழ் விழா 2020 – வெள்ளி விழா

கடையநல்லூர் ஜமீலாவிற்குத் தமிழவேள் விருது

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் தமிழ் மொழி விழாவில் நடத்தும் முத்தமிழ் விழா, இந்த ஆண்டு 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவாக, 19-12-2020, சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு இணைய வெளியில் சிறப்பாக நடைபெற்றது . சூம் செயலி மற்றும் யூ டியூப் நேரலை வழி நடைபெற்ற நிகழ்வில் ஏறத்தாழ 1200 பேர் பார்வையாளர்களாகக் கலந்து கொண்டனர்.

முத்தமிழ் விழாவை இங்கே காணலாம்.

ஆண்டுதோறும் உள்ளூர்த் தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கு வழங்கும் தமிழவேள் விருது இந்த ஆண்டு மூத்த எழுத்தாளர் கடையநல்லூர் ஜமீலா அவர்களுக்கு வழங்கப்பட்டது. கவிதை, சிறுகதை, கட்டுரை என 10 நூல்கள் எழுதியுள்ள திரு. N.M. சம்சுதீன் என்ற கடையநல்லூர் ஜமீலா அவர்கள் தொடர்ந்து தனது படைப்புக்களை எழுதி வருகிறார்.

நிகழ்வில் மாறுவேடப்போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் கதை சொல்லும் போட்டியில் வெற்றி பெற்ற பாலர் மற்றும் தொடக்கப் பள்ளி மாணவர்களின் படைப்புக்கள் இடம் பெற்றன. முத்தமிழ் விழாவையொட்டி நடைபெற்ற பாலர் பள்ளி முதல் பல்கலைக் கழகம் வரையிலான மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான போட்டிகளின் வெற்றியாளர்கள் நிகழ்வில் அறிவிக்கப்பட்டார்கள்.

நிகழ்விற்கு தலைமையேற்ற சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் சுப அருணாசலம், எழுத்தாளர் கழகம் நோய் பரவல் காலத்திலும் தொடர்ந்து தடைப்படாமல்  இலக்கியப் பணி ஆற்றியதை  குறிப்பிட்டதோடு, இது போன்ற இடர் நிறைந்த காலங்களில் இலக்கிய ஆர்வம் அனைவருக்கும் துணை நின்று உற்சாகம் அளிக்கும் எனக் குறிப்பிட்டார்.

இந்து அறக்கட்டளை வாரியத் துணைத் தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினருமான டாக்டர் இரா தினகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தமிழவேள் விருது வழங்கிச் சிறப்பித்ததுடன், நிகழ்வில் உரை நிகழ்த்தினார். முத்தமிழ் விழாவின் வெள்ளி விழாவையொட்டி, வாழ்த்துச் செய்திகள், கட்டுரைகள், சிறுகதைகள், அடங்கிய வெள்ளி விழா சிறப்பு மலர் வெளியீடு கண்டது.  சிறப்பு விருந்தினர் டாக்டர் இரா தினகரன் வெளியிட்ட வெள்ளி விழா மலரின் முதல் பிரதியைப் பேராசிரியர் முனைவர் சுப திண்ணப்பன் பெற்றுக் கொண்டார்.  வெள்ளிவிழா மலரின் சிறப்புக் குறித்து, மலராசிரியர் திரு நா ஆண்டியப்பன் உரை நிகழ்த்தினார்.

நிகழ்வின் இறுதியில் சிறப்புரை ஆற்றிய, திரைப்பட நடிகர், கவிஞர் ஜோ மல்லூரி, தமிழால் உலகை வெல்வோம் எனும் தலைப்பில் தமிழின் சிறப்பையும், உலகில் தமிழர்களின் வெற்றியையும், வெற்றி பெற கைக்கொள்ள வேண்டிய வழிகளையும் அழகு தமிழில் அருவிபோல் உரை நிகழ்த்தினார்.  நிகழ்வில் எழுத்தாளர் கழகச் செயலாளர் திருவாட்டி கிருத்திகா வரவேற்புரை ஆற்ற, துணைச் செயலாளர் திரு கோ இளங்கோவன் நன்றி கூறினார். நிகழ்வை டாக்டர் சரவணன் சண்முகம் தொய்வின்றி நெறிப்படுத்தினார்.

முத்தமிழ் விழா

1996ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட முத்தமிழ் விழா இன்று வரை தொய்வில்லாமல் தொடர்ந்து வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. முத்தமிழ் விழாவில் தொடர்ந்து ஆண்டுதோறும் ஒரு மூத்த எழுத்தாளருக்குத் தமிழவேள் விருது வழங்கப்படுவதையும் 1996க்கு முன் வழங்கப்பட்ட  நான்கு விருதுகளையும் சேர்த்து இதுவரை 28 பேருக்குத் தமிழவேள் விருது வழங்கப்பட்டிருக்கிறது. சிறப்பு விருதாக மேலும் மூவருக்குத் தமிழவேள் விருது வழங்கப்பட்டுள்ளது.

முத்தமிழ் விழாவில் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் நடத்தப்படும் போட்டிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். மக்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றிருக்கும் பாலர் பள்ளி, தொடக்கப்பள்ளி மாணவர்கள் பங்குபெறும் மாறுவேடப் போட்டியின் இறுதிச்சுற்று நடைபெறும். பேச்சுப்போட்டியில் முதல் பரிசு பெறும் மாணவரின் பேச்சும் இடம்பெறும்.

ஒவ்வொரு மாதமும் நடைபெறும் கதைக்களத்தில் ஆண்டுதோறும் முதல் பரிசு பெறும் சிறுகதைகளில் 3 தேர்வு செய்யப்பட்டு முத்தமிழ் விழாவில் $100 ரொக்கப் பரிசு தரப்படுகிறது.

விழாவின் சிறப்பம்சமாக தனித்தன்மை வாய்ந்த தலைப்பில் ஒரு சிறப்புரை இடம்பெறும்.

முத்தமிழ் விழா போட்டிகள்

முத்தமிழ் விழாவை ஒட்டி மாணவர்களுக்குப் போட்டிகள் நடத்தப்பட்டு இன்று பாலர் பள்ளி முதல் பல்கலைக்கழக மாணவர்கள் வரை ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 400-500 மாணவர்கள்  இலக்கியப் போட்டிகளில் பங்கேற்கிறார்கள்.

பொது மக்களுக்கும் சிறுகதைப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. சில ஆண்டுகளில் குறுநாவல், கவிதைப் போட்டிகளும் நடத்தப்படுகின்றன.

தமிழவேள் விருது

தமிழவேள் விருது வழங்குவதை முறைப்படுத்தி வழங்குவதற்காகவே முத்தமிழ் விழா 1996ஆம் ஆண்டு ஏற்படுத்தி முதல் முத்தமிழ் விழா மாநாட்டு மண்டபத்தில் 900 இருக்கைகள் நிரம்ப சிறப்பாக நடத்தப்பட்டது.

அரங்கம் அதிரக் கையொலியுடன்  முதல் முத்தமிழ் விழாவில் எழுத்துச் செம்மல் திரு. சே.வெ. சண்முகம் அவர்களுக்கு ஐந்து பவுன் தங்கத்தில் தமிழவேள் விருதை அப்போதைய கம்போங் கிளாம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆர். சின்னக்கருப்பன் வழங்கினார்.

தற்போது நான்கு பவுன் தங்கத்தில் தமிழவேள் விருதின் செலவை ஆண்டுதோறும் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் நிறுவனரும் கழகத்தின் புரவலருமான திரு. முகமது முஸ்தபா ஏற்றுக்கொள்கிறார்.

தமிழவேள் விருது பெறும் எழுத்தாளர்களை பேராசிரியர், முனைவர் சுப. திண்ணப்பன் தலைமையில் இயங்கும் விருதுத் தேர்வுக் குழு தெரிவு செய்கிறது.  மூத்த எழுத்தாளர் திரு. ஜே.எம். சாலியும் அக்குழுவில் இடம்பெற்றுள்ளார்.

 

முத்தமிழ் விழா 2015

ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் திரு. ஸ்டாலின் குணசேகரன் “எழுச்சி தந்த எழுத்து” எனும் தலைப்பில் அருமையாக உரையாற்றி அனைவரையும் கவர்ந்தார்.

ஸ்டாலின் குணசேகரன் சிறப்புரை காணொளி