முத்தமிழ் விழா
1996ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட முத்தமிழ் விழா இன்று வரை தொய்வில்லாமல் தொடர்ந்து வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. முத்தமிழ் விழாவில் தொடர்ந்து ஆண்டுதோறும் ஒரு மூத்த எழுத்தாளருக்குத் தமிழவேள் விருது வழங்கப்படுவதையும் 1996க்கு முன் வழங்கப்பட்ட நான்கு விருதுகளையும் சேர்த்து இதுவரை 28 பேருக்குத் தமிழவேள் விருது வழங்கப்பட்டிருக்கிறது. சிறப்பு விருதாக மேலும் மூவருக்குத் தமிழவேள் விருது வழங்கப்பட்டுள்ளது.
முத்தமிழ் விழாவில் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் நடத்தப்படும் போட்டிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். மக்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றிருக்கும் பாலர் பள்ளி, தொடக்கப்பள்ளி மாணவர்கள் பங்குபெறும் மாறுவேடப் போட்டியின் இறுதிச்சுற்று நடைபெறும். பேச்சுப்போட்டியில் முதல் பரிசு பெறும் மாணவரின் பேச்சும் இடம்பெறும்.
ஒவ்வொரு மாதமும் நடைபெறும் கதைக்களத்தில் ஆண்டுதோறும் முதல் பரிசு பெறும் சிறுகதைகளில் 3 தேர்வு செய்யப்பட்டு முத்தமிழ் விழாவில் $100 ரொக்கப் பரிசு தரப்படுகிறது.
விழாவின் சிறப்பம்சமாக தனித்தன்மை வாய்ந்த தலைப்பில் ஒரு சிறப்புரை இடம்பெறும்.
முத்தமிழ் விழா போட்டிகள்
முத்தமிழ் விழாவை ஒட்டி மாணவர்களுக்குப் போட்டிகள் நடத்தப்பட்டு இன்று பாலர் பள்ளி முதல் பல்கலைக்கழக மாணவர்கள் வரை ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 400-500 மாணவர்கள் இலக்கியப் போட்டிகளில் பங்கேற்கிறார்கள்.
பொது மக்களுக்கும் சிறுகதைப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. சில ஆண்டுகளில் குறுநாவல், கவிதைப் போட்டிகளும் நடத்தப்படுகின்றன.
தமிழவேள் விருது
தமிழவேள் விருது வழங்குவதை முறைப்படுத்தி வழங்குவதற்காகவே முத்தமிழ் விழா 1996ஆம் ஆண்டு ஏற்படுத்தி முதல் முத்தமிழ் விழா மாநாட்டு மண்டபத்தில் 900 இருக்கைகள் நிரம்ப சிறப்பாக நடத்தப்பட்டது.
அரங்கம் அதிரக் கையொலியுடன் முதல் முத்தமிழ் விழாவில் எழுத்துச் செம்மல் திரு. சே.வெ. சண்முகம் அவர்களுக்கு ஐந்து பவுன் தங்கத்தில் தமிழவேள் விருதை அப்போதைய கம்போங் கிளாம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆர். சின்னக்கருப்பன் வழங்கினார்.
தற்போது நான்கு பவுன் தங்கத்தில் தமிழவேள் விருதின் செலவை ஆண்டுதோறும் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் நிறுவனரும் கழகத்தின் புரவலருமான திரு. முகமது முஸ்தபா ஏற்றுக்கொள்கிறார்.
தமிழவேள் விருது பெறும் எழுத்தாளர்களை பேராசிரியர், முனைவர் சுப. திண்ணப்பன் தலைமையில் இயங்கும் விருதுத் தேர்வுக் குழு தெரிவு செய்கிறது. மூத்த எழுத்தாளர் திரு. ஜே.எம். சாலியும் அக்குழுவில் இடம்பெற்றுள்ளார்.